சென்னை:யானைகள் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என முரளிதரன் என்பவரும், செங்கல் சூளைகளை மூட உத்தரவிட வேண்டும் என கற்பகம் என்பவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கை கடந்த 2019ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள் யானை வழித்தடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜன.10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாசுக்கட்டுப்பாட்டுத் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே செங்கல் சூளைகள் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கடந்த 2019ஆம் ஆண்டு முதல் யானைகள் வழித்தடம் மற்றும் செங்கல் சூளைகளை அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின் கோவை மாவட்டம் பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு, கண்துடைப்புக்காக 2 சாக்குகள் செம்மண் வைத்திருந்தார்கள் என வழக்கை பதிந்து சிலரை கைது செய்கின்றனர். இச்சம்பவத்திற்கு முக்கிய அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டமிட்டே இந்த குற்றம் செய்யப்பட்டுள்ளது. மண் எடுத்துச் செல்வதற்கான சாலை மற்றும் பாலங்களை அதிகாரிகள் துணை இல்லாமல் தனியாக அமைத்திருக்க முடியாது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வணிகம் நடைபெற்றுள்ளது.
அதனால், மாவட்ட காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால், நாகஜோதி ஐ.பி.எஸ் மற்றும் சசாங் சாய் ஐ.பி.எஸ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அடங்கிய விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். சிறப்பு குழு புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ளலாம். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.