சென்னை:திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, அரசு நிலமாக வகை மாற்றம் செய்து, பின் அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீண்டும் வனப்பகுதி நிலமாக அறிவிக்கக் கோரி திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், 'வனத் துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். 'பின்னர் அந்த தொழிற்சாலைகள் வசம் இருந்த அந்த இடத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளார்' எனவும் ராஜ்மோகன் தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 'பாதுகாக்கப்பட்ட வனத்துறை நிலத்தை அரசு அனுமதியில்லாமல், வகைமாற்றம் செய்து பட்டா பெற்றது சட்டவிரோதமானது என்பதால், வனத் துறை நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும்' என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.