தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

O.Panneerselvam Suo Moto case: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 4:36 PM IST

சென்னை:கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, 2006-இல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையை ஏற்று, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012-இல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2023ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில், இன்று முதல் இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் இன்றும், நாளையும் ஆஜராகி வாதிட இயலாததால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26ஆம் தேதிகளுக்கு தள்ளி வைத்தார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொலை வழக்குகளில் போலியான நபர்கள் சரண் அடைவதைத் தடுக்க நெறிமுறைகள் வகுக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details