சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 667 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கேபாலு, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன், பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இன்பதுரை மற்றும் பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், “ சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில், சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை. கள்ளச்சாராயத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.