சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களிலும், கிரிவலப்பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுமார் 200க்கும் அதிகமான ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கிரிவலப்பாதையில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், விஜயன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுமார் 100 ஆண்டுகளாக அங்கேயே கடை நடத்தி வருவதாகவும், வருவாய் ஆவணங்களின் படி, அந்த இடத்திற்கான பட்டா தன்னிடம் இருப்பதால் தன்னை அப்புறப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "வருவாய் ஆவணங்களின் படி, நிலத்துக்கு உரிமை உள்ளதால் என்னை அப்புறப்படுத்தக் கூடாது. கிரிவலப்பாதையில் எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ளவில்லை. கடையும் நடத்தவில்லை" என தெரிவிக்கப்பட்டது.