சென்னை: கடந்த 2001-2006 காலக்கட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, 2006-இல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012-இல் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முடிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணை இன்று (ஏப்ரல் 8) தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:"திமுக ஆட்சியிலும் பல துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளது" - எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024