சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், டாஸ்மாக் அமைக்க வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படும் கடைகளின் விவர அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க:சிறுவனின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்.. ஏழு தையல் போட்டு சிகிச்சை.. சென்னையில் பரபரப்பு!
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.