சென்னை: சென்னையில் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோயிலுக்கு இந்து அறநிலைய துறையால் நியமிக்கப்பட்ட தக்கார் நியமனத்தை எதிர்த்து ரவி கே. விஸ்வநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், திருக்கோயில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனது தாத்தா நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941ஆம் ஆண்டு கிரயப்பத்திரம் மூலம் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோயில் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அறநிலையத் துறை இக்கோயிலில் நிர்வாகம் செலுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, அறநிலையத் துறை தரப்பில் கோயில் செயல் அலுவலர் அளித்த பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானவை என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதை அறநிலையத் துறை, தொல்லியல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலைய சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோயிலை கிரயப்பத்திரம் மூலமாக வாங்கவோ, விற்கவோ முடியாது என்றும், மேலும் தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரயப்பத்திரம் எழுதி வைத்தார் என்பது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:நீலகிரிக்கு இன்னும் காத்திருக்கு.. கோவையிலும் வாய்ப்பு.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை! - Chennai Meteorological center