சென்னை:மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது 12 வயது மகன் கிஷோரை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குடல்வால் அழற்சி ஏற்பட்டு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்காக பணத்தைச் செலுத்திய பின்னர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் என்பவர் அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், தன் மகன் கிஷோரைச் சந்திக்க மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தனது மகன் கிஷோர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனை மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்வு முகாமில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தன்னுடைய மகன் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.