தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அரசு தோல்வி அடைந்து விட்டது - சென்னை ஐகோர்ட் சரமாரி கருத்து! - KALLAKURICHI ILLICIT LIQUOR

கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல் இத்தனை ஆண்டு காலம் மது விலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Etv Bharatமுதல்வர் ஸ்டாலின், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்)
Etv Bharatமுதல்வர் ஸ்டாலின், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 1:45 PM IST

சென்னை: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்காமல் இருந்திருப்பது அரசின் தோல்வி என சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்னதான் செய்திகொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி விஷ சாராயம் குடித்ததில், 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேர் வரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ வசம் ஒப்படைப்பு

இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிசிஐடி நடத்திய விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என நேற்றைய தினம் (டிச.17) உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாரய விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்கு துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 69க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் அனைவரின் வழக்கிலும் பதில் மனுத் தாக்கல் செய்து விட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரிக்கு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அப்போது, எதனடிப்படையில் அனைவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பல ஆண்டுகளாக இவர்கள் கள்ளச்சாராயம் விற்று வந்ததாகவும், கள்ளச்சாராய மரணத்தால் மாவட்டம் முழுவதும் பதற்ற நிலை உருவானதாக கூறினார்.

அரசின் தோல்வி

இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாரய விற்பனை நடைபெறுகிறது? என்றால் அதனை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details