தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுக்களை இப்போது விசாரிக்க முடியாது - கோர்ட்..! - ARMSTRONG MURDER CASE

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது தற்போது விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 10:13 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்போ செந்தில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தனர்.

அப்போது, அரசு தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, நாகேந்திரனை சிறை மாற்றம் செய்வது குறித்து அடுத்த விசாரணையில் பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என்றும், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமித்து கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை சம்பவம்; 'பாதிக்கப்பட்ட மாணவி அப்படி சொல்லவே இல்லை'.. காவல்துறை அதிரடி அறிவிப்பு..!

மேலும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தற்போதைய சூழலில் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதியிடம் முறையிட்ட வழக்கின் ஏ1 அக்கியூஸ்ட் நாகேந்திரன், '' ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை ஏன் கொலை செய்யப் போகிறேன்? 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை காவல்துறை சிறையில் வைத்தே கொல்ல முயற்சிக்கின்றனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை'' என கூறினார்.

அதனைக் கேட்ட நீதிபதி, உணர்ச்சிப்பூர்வமாகப் பேச வேண்டாம், இந்த வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும். வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின், நாகேந்திரனை சிறை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details