மயிலாடுதுறை:தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி சீர்காழியில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துக்கொண்டு திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.
ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு (Credits -ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. ஜூன் 13 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் உரிய நீர் இல்லாததால், தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவேரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல் படி, தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இதுவரையில் 44 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால், இதை மறுத்து வருகிறது. ஆகவே, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் வருகிற 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை தருகிறது.
தமிழகத்தில் தரமற்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, நீதிமன்றத்தின் மூலமாக குற்றவாளியாக நிரூபிக்க வேண்டுமே தவிர என்கவுண்டர் தீர்வாகாது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது திமுகவின் மூன்று ஆண்டுகால சாதனைக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் பரப்புரையின்போது எதிர்தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவை அனைத்துக்கும் புறந்தள்ளி விக்கிரவாண்டி தொகுதி மக்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளனர். இது தமிழகத்தில் நடைபெறும் சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்தியா முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலம், பத்ரிநாத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது வடஇந்திய மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ளதை காட்டுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:விசிக பிரமுகர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள்.. கட்டிலுக்கு கீழே காத்திருந்த அதிர்ச்சி.. கும்பகோணத்தில் நடந்தது என்ன? - Hidden accused arrested