சென்னை: மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கேரளாவில் நடைபெற்ற தேர்தல் மாதிரி வாக்குப் பதிவு (Mock Polls) குறித்தும், பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இதுவரை அதுபோன்ற ஒரு தகவலோ அல்லது புகாரோ வரவில்லை எனவும், தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் சரியாக சென்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், நாளை வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு, அதாவது காலை 7 மணிக்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வாக்குப் பதிவுக்கு தயார் படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.