நெல்லையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து திருநெல்வேலி: அரியலூர் மாவட்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்ட் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி, நேற்று (பிப்.20) இரவு நெல்லை - கன்னியாகுமரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே பழுதாகி நின்றுள்ளது. இரவு நேரம் என்பதால் வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய பணியாளர்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பழுதடைந்த லாரி நெடுஞ்சாலையின் நடு வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து மின் பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, ஏற்கனவே பழுதாகி நெடுஞ்சாலையில் நடுவழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் திருச்சியில் இருந்து வந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. மேலும், படுகாயம் அடைந்த லாரியின் ஓட்டுநர் வெளியே வர முடியாத அளவிற்கு சிக்கிக் கொண்டிருந்துள்ளார். இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:ஏரியாவிட்டு ஏரியா ஆய்வு செய்த காவலர்கள் சஸ்பெண்ட் - பின்னணி என்ன?
ஆனால் போலீசாரின் முயற்சி பலன் அளிக்காததை அடுத்து, கங்கைகொண்டான் மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் படையினருக்கு விபத்து குறித்து போலீசார் தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள், மோதியிருந்த இரண்டு லாரிகளையும் கிரேன் மூலம் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், திருச்சியில் இருந்து வந்த லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநரை போராடி மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை - கன்னியாகுமரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.
இதையும் படிங்க:தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கொல்ல முயன்ற கொள்ளையன்.. ஈரோட்டில் நடந்த திகில் சம்பவம்!