மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இன்று(ஏப்.19) காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவர்கள் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவச் சேவை செய்த டாக்டர் ராமமூர்த்தி, வயது முதிர்வு காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்த நிலையில், இன்று வாக்களிப்பதற்காக மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள டிபிடிஆர் (DBTR) தேசியத் தொடக்கப் பள்ளியில் மனைவியுடன் வாக்களிக்க வந்தபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். மேலும், இந்த வாக்குச்சாவடி மையத்தில் 450க்கும் மேற்பட்ட ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் கொத்ததெரு, வேள முறித்தான் பட்டினம் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்த ராஜ்குமார் என்ற இளைஞர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மக்களவை தேர்தல் விறுவிறுப்பு: ஜனநாயக கடமை ஆற்றிய கின்னஸ் சாதனை பெண் ஜோதி ஆம்கே! - Lok Sabha Election 2024 Phase 1