தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024; விழுப்புரத்தில் சிவி சண்முகத்தின் வியூகம் பலிக்குமா? வெற்றியை தக்க வைப்பாரா ரவிக்குமார்? - lok sabha election 2024‘ - LOK SABHA ELECTION 2024‘

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்
விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 10:19 PM IST

Updated : Jun 3, 2024, 8:05 PM IST

விழுப்புரம்: விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களையே பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளது விழுப்புரம் மாவட்டம். 2009ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய தனித்தொகுதியாக திகழ்கிறது விழுப்புரம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,43,436 உள்ள நிலையில், ஆண்கள் 7,20,770 வாக்காளர்களும், பெண்கள் 7,22,481 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 185 வாக்காளர்களும் உள்ளனர்.

இத்தேர்தலில் 11,35,540 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 81.9. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன், அமமுக வேட்பாளர் கணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

தொகுதியை நழுவவிட்ட அதிமுக:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டு 5,59,585 வாக்குகள் பெற்றதுடன் 11% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். சுயேச்சை வேட்பாளர் கணபதி 58,019 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலாதா 24,609 வாக்குகளையும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி 17,891 ஓட்டுகளை பெற்றார். விழுப்புரம் தொகுதியில் அதிமுக தன்னுடைய ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டதால், இந்த தேர்தல் பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்த தேர்தலாகவே இன்றுவரை பார்க்கப்பட்டு வருகிறது.

தோல்விக்கான காரணம்:அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது, மாநிலம் முழுவதும் பரவலாக இருந்த அதிருப்தியும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்கை இழக்க நேரிட்டதும் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றிப்பெற இந்த காரணமே பொருந்தியது.

மும்முனைப் போட்டி:கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில், கடந்தமுறை போன்றே இம்முறையும் திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாஜக கூட்டணியில் பாமகவும் கூட்டணி வைத்து களமிறங்கி உள்ளன. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியான மொத்த நபர்களின் எண்ணிக்கை 15,03,115 (ஆண்கள் 7,44,350, பெண்கள் 7,58,545, மூன்றாம் பாலினத்தவர் 220) பதிவான வாக்குகள் 11,50,164. வாக்குப்பதிவு சதவீதம் 76.52.

இந்த தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான விசிகவின் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் இரட்டை இலை சின்னத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரும் களமிறங்கி உள்ளனர். யாருடனும் கூட்டணி இல்லை என்று மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இயக்குனர் களஞ்சியமும் போட்டியிடுகிறார்.

பரப்புரை யாருக்கு சாதகம்?:விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு உறுதுணையாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் பொன் கௌதம சிகாமணி வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிலும், மக்களை கவரும் விதமாக பொன்முடி நடனமாடியும் பாட்டுப்பாடியும் விழுப்புரம் தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தார் .

அதிமுக மூத்த தலைவர்களை காட்டிலும், பாஜக மற்றும் பாமகவை நேரடியாக எதிர்க்க தொடங்கியவராக சிவி சண்முகம் இந்த தேர்தலில் விளங்கினார். வன்னியர்களின் வாக்கு நிறைந்த விழுப்புரம் தொகுதியில் சிறப்பான வியூகம் அமைத்து அனைவருக்கும் தெரிந்த முகமான பாக்கியராஜை போட்டியிட வைத்தது சிவி சண்முகம் தான் என்கிற பேச்சும் தொகுதியில் பரவலாக அடிப்பட்டது. இதேபோன்று பக்கத்து தொகுதியான கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை விழுப்புரம் தொகுதியில் பணியாற்ற வைத்தார் என்கிற பேச்சும் கட்சியினர் மத்தியில் பரவலாக இருக்கிறது. எப்படியாவது இந்த முறை விழுப்புரம் தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான சம்பவங்களை சப்தமின்றி செய்து முடித்துள்ளார் சிவி சண்முகம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பாமக திமுகவுடன் தான் கூட்டணி வைக்கும் என்று கடைசி வரை பலரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் கூட்டணி வைத்து விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் என்கிற வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவரை களம் இறக்கியது. முரளி சங்கர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ' நான் ஆறு மொழியில் பேசுவேன். உங்களுடைய குறைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன். இது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பூர்வீக மாவட்டம். ஆகவே, வன்னியர்கள் ஓட்டுக்கள் எங்களுக்குதான்' என வாக்காளர்களை கவரும் விதத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

என்ன நடந்தாலும் யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் தனித்துதான் போட்டியிட்டுவோம் என கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்ட நாதக வேட்பாளரான இயக்குனர் களஞ்சியத்துக்கு போதுமான கூட்டம் சேரவில்லை என்பதே நிதர்சனம்.

மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு?: திமுகவிற்கும், அதிமுகவிற்கும் நேரடி மோதல் நிலவுவதாக கூறப்படும் விழுப்புரத்தில், வெற்றிப் பெற போவது திமுகவின் ஆதரவு பெற்ற விசிகவின் ரவிக்குமாரா, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வியூகத்துடன் களமிறங்கி உள்ள பாக்கியராஜா? என்பதற்கான விடை ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும். அதேசமயம், சிட்டிங் எம்.பி.யான ரவிக்குமார், கடந்த 2019 தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது தொடர்பாக தொகுதி மக்கள் மத்தியில் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகள் நிலவி வருகின்றன. அத்துடன் விழுப்பும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் சொந்த மாவட்டம் என்பதையும், பாமக, பாஜகவுடன் கைகோர்த்துள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தேனியில் இம்முறை வெற்றியை ருசிக்கப் போவது யார்?

Last Updated : Jun 3, 2024, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details