விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியின் வாக்கை வேறொருவர் போட்டரா என அதிகாரிகள் ஆய்வு திண்டுக்கல்:பழனி அருகே ஆயக்குடி பகுதியில் இளைஞரின் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியதால் வாக்களிக்க முடியாமல் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி அருகே ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் (தமிழக வெற்றிக் கழகம்) நகர துணைத் தலைவர் சரவணன் என்பவர் வாக்கு செலுத்தச் சென்றார். அப்போது, சரவணனின் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியதால் சரவணன் அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க:"பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்" - வாக்களித்த பின் அண்ணாமலை சவால்! - Lok Sabha Election 2024
இதனைத்தொடர்ந்து, தான் இன்னும் வாக்கு செலுத்தவில்லை என்றும் அதிகாரியிடம் அவர் முறையிட்டபோது, இது குறித்து மண்டல தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில், மண்டல தேர்தல் அதிகாரியும் அங்கு வருகை தந்தார். அப்போது மூன்று பூத் ஏஜண்ட்டுகளிடமும் இருந்த பட்டியலில் புகைப்படங்கள் வேறுவேறாக இருந்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய விஜய் ரசிகர் மன்ற துணை தலைவர் சரவணன், 'எனது ஓட்டை வேறொருவர் ஏற்கனவே போட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். இது தொடர்பாக மாலை 3.00 மணியளவில் விசாரிப்போம் என்றார்கள். இதனிடையே, இந்த குளறுபடி குறித்து பலரும் வந்து கேள்வியெழுப்பிய நிலையில், உடனடியாக மண்டல தேர்தல் அதிகாரிக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாக கூறுகிறார்கள்.
ஆகவே, எனக்கு வாக்குரிமையை காத்து நான் முறைப்படி வாக்களிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், வாக்களிக்க முடியாமல் போன இளைஞருக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனியில் விஜய் மன்ற நிர்வாகி வாக்களிக்க முடியாமல் தவித்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு! - Lok Sabha Election 2024