வேலூர்:இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட 'சிப்பாய் புரட்சி' நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாகத் திகழ்கிறது. கர்நாடகாவில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிக தூரம் கடந்து செல்கிறது. பாலாற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது.
தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8வது தொகுதியாக வேலூர் தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.
2019 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்:2019 நாடாளுமன்றத் தேர்தலில் 14,26,991 மொத்தம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 6,98,644 ஆண் வாக்காளர்கள், 7,78,245 பெண் வாக்காளர்கள் மற்றும் 102 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 10,16,638 நபர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 71.24.
இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த 4,85,340 வாக்குகளும், புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர்.8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.
முன்னதாக, திமுக முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் லட்சகணக்கில் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 தேர்தல் வாக்குப்பதிவு: கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 15,28,273 வாக்காளர்களில் (7,40,222 ஆண் வாக்காளர்கள், 7,87,8385 பெண் வாக்காளர்கள் மற்றும் 213 மூன்றாம் பாலின வாக்காளர்கள்) 11,23,715 பேர் தங்களது வாக்குறுதியை செலுத்தியிருந்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 73.53.