சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்டமான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் 135 பேர் மட்டுமே பெண்கள். 79 முஸ்லீம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 890 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த பட்சமாக அசாமின் திருப்ருகர் மற்றும் நாகாலாந்து தொகுதிகளில் 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
அதிக வயதான வேட்பாளராக மத்திய பிரதேசத்தின் சித்தி தொகுதியில் 83 வயதான (Eldest Candidate) பகவான் பிரசாத் திவாரி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குறைந்த வயது வேட்பாளர்களாக (Youngest Candidate) தமிழ்நாட்டில் 25 வயது வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே சுயேட்சையாக களம் காண்கின்றனர்.