தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024: மத்திய சென்னையை தக்கவைக்குமா திமுக? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION RESULT 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 2:30 PM IST

சென்னை:தலைநகர் சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதியில் ஒன்றான மத்திய சென்னையில் தலைமைச் செயலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, துறைமுகம் என முக்கிய இடங்கள் இருப்பதால் சிறப்புக் கவனம் பெற்ற தொகுதியாக உள்ளது. மேலும், நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நட்சத்திர தொகுதியாகவும் மத்திய சென்னை திகழ்கிறது.

இம்மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதி உள்ளன. மத்திய சென்னை தொகுதி நட்சத்திர தொகுதியாகவே இருக்கிறது.

வாக்குகளை அள்ளிய திமுக:2019 நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியின் மொத்த வாக்குகளான 11,26,341 ஓட்டுகளில் 58.95 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இவற்றில் தயாநிதி மாறன் (திமுக) 4,47,150 வாக்குகளும், சாம்பால் 1,46,813 (பாமக, அதிமுக கூட்டணி) வாக்குகளும் பெற்றனர். கார்த்திகேயன் ( நாம் தமிழர் கட்சி) 30,809 வாக்குகளும், கமிலா நாசர் (மக்கள் நீதி மய்யம்) 92,647 வாக்குகளும், தெகலான் பாகவி (எஸ்டிபிஐ) 23,690 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

அதிக முறை வெற்றி பெற்ற திமுக:2019 தேர்தலில் திமுகவை சார்ந்த தயாநிதி மாறன் 3,00,337 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான அவர், இந்த தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன் இதே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப்பின் மகன் தயாநிதி மாறன் இதே தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 இல் வாக்குப்பதிவு நிலவரம்:மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரையில் தற்போது மொத்தம் 13,16,603 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,53,358 ஆண் வாக்காளர்கள், 6,62,925 பெண் வாக்காளர்கள், 320 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 58.69% வாக்குகளே பதிவாகியுள்ளன. இந்த முறை திமுக சார்பில் தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் பார்த்தசாரதியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வினோஜ் பி.செல்வமும், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம், கடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சென்னை களநிலவரம் என்ன?

திமுக:மத்திய சென்னையில் இந்த முறையும் திமுக நேரடியாகக் களம் காண்கிறது. இத்தொகுதியில் 15 வருடங்கள் முரசொலி மாறன், அதன்பின் 15 ஆண்டுகள் அவரது மகன் தயாநிதி மாறன் என 30 ஆண்டுகளாக மாறன் குடும்பத்தினர் இங்கு வெற்றி பெற்று வருகின்றனர். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி:அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜய்காந்த் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பாஜக: பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அணணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தினர்.

மீண்டும் வேட்பாளரான மருத்துவர்:நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன், மத்திய சென்னையில் மீண்டும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி யார் பக்கம்?:மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரையில் கடந்த ஏழு முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முறை மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆறு முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. மாறன் குடும்பத்தினரின் பராம்பரிய வெற்றி களமான மத்திய சென்னையை இந்த முறையும் கைபற்ற திமுக கடும் முயற்சியை மேற்கொண்டது. திமுக முயற்சி பலிக்குமா? மத்திய சென்னையில் வெற்றி யார் பக்கம் என்பது ஜுன் 4-இல் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024; வடசென்னை கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக?

ABOUT THE AUTHOR

...view details