தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி வாணி (56). இவர்களுக்கு சக்திவேல், சந்தானவேல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், சக்திவேல் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
சந்தானவேல் ரணசூர் நாயக்கன்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை வீடு பூட்டி இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள், சந்தானவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சந்தானவேல் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருப்பதும், வீட்டிற்குள் இருந்து முனங்கல் சத்தம் வருவதை கேட்டதும், கதவினை உடைத்து பார்த்த போது கழுத்தில் காயத்துடன் அவருடைய தாயார் வாணி மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சந்தானவேல் தாயார் வாணியை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வாணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயின் காணமால் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று காலை கண்விழித்த வாணி, தன்னுடைய மகன் சந்தானவேலிடம் பேசியுள்ளார். தனது வீட்டின் அருகில் இருக்கும் சுடலை முத்து தான் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி நகை பறித்து சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து, எட்டயபுரம் காவல் நிலையத்தில் சந்தானவேல் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் வாணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியின் வீட்டு அருகே வசித்து வரும் பரமசிவம் என்பவரது மகன் சுடலை முத்து, லோடுமேனாக பணியாற்றி வருகிறார். அருகில் உள்ள வீடு என்பதால் சுடலை முத்து வாணி வீட்டில் உள்ள எல்லோருடன் சகஜமாக பழகுவது மட்டுமின்றி, அடிக்கடி வீட்டுக்கு வருவதும் வழக்கம் என்று தெரிகிறது.
அது போல சம்பவத்தன்று வாணி வீட்டிற்கு வந்த சுடலை முத்து சிறிது நேரம் பேசிகொண்டு இருந்துள்ளார். கழுத்தில் சுடலை முத்து கயிறு ஒன்று போட்டு இருந்தாக தெரிகிறது. அது பற்றி வாணி கேட்டதற்கு தான் காட்டிற்கு போவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு டீ வேண்டும் என்று சுடலை முத்து கேட்க, வாணியும் டீ போட்டு கொடுத்துள்ளார்.