திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், எண்ணக்குடி கிராமத்தில், சித்திரபட்டன் வீரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி அன்று காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு கிடா வெட்டி ஊருக்கே கறி விருந்து வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த வருட சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 20) இரவு ஊர் நாட்டாண்மை அன்பழகன் முன்னிலையில், கோயில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, கோயில் திருவிழாவிற்காக ஒரு வீட்டிற்கு ரூபாய் 1,000 வரி செலுத்த வேண்டும் என ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட நிலையில், அதனை யார் யார் கொடுத்தார்கள் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, அதே பகுதியில் உள்ள கோழி முட்டை என்ற சந்திரசேகர் (58) என்பவர் வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவர் மீது பேரளம் காவல் நிலையத்தில் தொடர் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டதால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.