சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக நேற்று பிறப்பிக்கப்பட்ட திருத்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார்.
மேலும் அவர், இந்த திருத்த அறிவிப்பாணையின்படி, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் தனி இடத்தில் தான் மதுபானம் விநியோகிக்க வேண்டும், குறிப்பிட்ட அந்த பகுதியைத் தவிர வேறு இடங்களில் விநியோகிக்க கூடாது, அந்த இடங்களை பொதுமக்கள் பார்க்காத வகையில் மறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது பொது இடங்களில் மதுபானம் அருந்துவது குற்றம் எனும் மதுவிலக்குச் சட்டத்துக்கு விரோதமாக உள்ளதால், இந்த திருத்த அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மார்ச் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் பசிங்க: திமுகவில் இணைந்தார் தருமபுரி தொகுதி பாமக முன்னாள் எம்பி பு.த.இளங்கோவன்!