சென்னை:இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தேர்தல் விதிகளை மீறி பணப்பட்டுவாடா நடக்காமல் தடுக்க பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். அப்போது அவர் பேசுகையில், "இதுவரை தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 165 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர் எனவும் நடைபெறவிருக்கின்ற மக்களவை தேர்தலுக்காக மொத்தம் 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும்" தெரிவித்தார்.