தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, ஆடுதுறையை அடுத்துள்ள ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது மும்தாஜ்பேகம் மகன் முன்தஸீர் (19). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாலை, நண்பனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வரை சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அவரது தாயாருக்கு மர்ம நபர்கள் அலைபேசி வாயிலாக அழைத்து, உங்கள் மகனை கோவைக்கு கடத்தி செல்கிறோம், நாளை 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு மீட்டுச் செல்லுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முன்தஸீரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அதற்கு மறுநாள, அதாவது 2019, ஜனவரி 5ஆம் தேதி, முன்தஸீர் திருபுவனம் வீரசோழன் ஆற்றுக்குச் செல்லும் மண் சாலையின் அருகேயுள்ள கார்த்தி என்பவரின் தென்னந்தோட்டத்தில், முன்தஸீர் கழுத்தறுப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய முன்தஸீரின் நண்பர்களான திருபுவனத்தைச் சேர்ந்த இஜாஸ் அகமது (20), ஜலாலுதீன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார். இதில், 3வது குற்றம் சாட்டப்பட்ட நபர் மைனர் என்பதால், அது குறித்த வழக்கு தனியாக தஞ்சாவூர் இளம்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கும்பகோணம் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் விசாரணை முழுமை அடைந்ததை அடுத்து, இன்று இவ்வழக்கிற்கான தீர்ப்பினை நீதிபதி ராதிகா வழங்கினார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட இஜாஸ் அகமது (20) மற்றும் ஜலாலுதீன் (19) ஆகிய இருவருக்கும், இந்திய தண்டனை சட்டம் 302-இன் கீழ் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார், இதற்கிடையே, இவ்வழக்கில் இருவருக்கும் சட்டப்பிரிவு 120 (பி) சதி திட்டம் தீட்டுதலுக்காக 2 ஆண்டுகள் தண்டனை, சட்டப்பிரிவு 364 ஆள் கடத்தலுக்காக 10 ஆண்டுகள், பிரிவு 201க்கு 3 ஆண்டுகள் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டிக்கொலை.. பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையா?