சென்னை:வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி தனது வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும் அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சிவக்குமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், மகனை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி(காவல்துறைத் துணைத்தலைவர்) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி(CB-CID) எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார். அதனை படித்துப் பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.