தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (50). இவர் திருவாரூர், கபிஸ்தலம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் 23 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் முதன்முறையாக தான் பணிபுரியும் காவல் நிலையத்தை அறிவகம் என்ற நூலகமாக மாற்றி உயர் அலுவலர்கள், சக போலீசார் மற்றும் பொதுமக்களிடத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். காவல் நிலைய வளாகத்தில் மேற்கூரை அமைத்து, அங்கு உட்கார இருக்கைகள் போட்டு, பாதுகாப்பாக பீரோவில் நூல்களை அடுக்கி வைத்து, நூலகத்தை தொடங்கியுள்ளார்.
அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல், ஆன்மீகம், கதை, கவிதை, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் விவேகானந்தர், டாக்டர் அப்துல்கலாம், அன்னை தெரசா ஆகியோரின் பொன்மொழிகளை அச்சிட்டு, காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை அறிவகமாக உருவாக்கி உள்ளார்.
இந்த அறிவகத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை எஸ்.பி ஆஷிஷ் ராவத் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு அழியாத செல்வம் கல்வி ஒன்றே என அச்சிடப்பட்ட பேனாவைவும், 'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என அச்சிடப்பட்ட பைலையும், தனது சொந்த செலவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழங்கி வருகிறார்.