கோயம்புத்தூர்: கோவையில் தமிழ்நாடு - கேரள எல்லையான ஆனைகட்டி மலைப்பகுதியில், தமிழ்நாடு பாஜக தலைவரும், அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஆனைகட்டி பகுதியில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அதிகமாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தும் பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று.
இந்த பகுதிக்கு வரக்கூடிய நிதி அனைத்தும், மத்திய அரசின் நிதியாகும். இந்த பகுதியில் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏகலைவா பள்ளிகள் கொண்டு வரவேண்டும். வீடு, சிலிண்டர் உள்ளிட்ட மத்திய அரசின் சலுகைகள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 3வது முறையாக பிரதமராக மோடி ஆட்சியில் அமர வேண்டும்.
பிரதமர் மோடி வந்தவுடன்தான், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோன்று, மத்திய அரசின் 100 சதவிகித திட்டங்களும், மக்களுக்கு வந்து சேர வேண்டும். செங்கல் சூளையில் மண் எடுப்பதில் இங்கே பிரச்னை இருந்து வருகிறது. திமுக குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றது.
இவர்களே பிரச்னையை துவக்கிவிட்டு, பின்னர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்கு, சுற்றுச்சூழல் அமைச்சரிடம் பேசி தான் தீர்வு காண வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமலும், இயற்கைக்கு பாதிப்பு இல்லாமலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் நிறைந்து இயற்கை வளமிக்க பகுதியாக இப்பகுதி இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில் இது போன்ற பகுதிகளைத் தேடி அனைவரும் வருவார்கள்.