கரூர்:தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு, தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் கரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.30) பல்வேறு திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தனர். அந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்த தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு, வெங்ககல்பட்டியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியையும் ஆய்வு செய்தனர்.
அதில் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, அந்த விடுதியில் தங்கிப் பயிலும் கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி மாணவிகள், தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகையிடம், விடுதிக்கு வரும் வழியில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி இல்லை என்றும் அதனை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அரசு பேருந்துகள் கூட நின்று செல்வது இல்லை என வேதனை தெரிவித்த மாணவிகள், காவிரி குடிநீர் இல்லாததால் உப்பு நீரைப் பருக வேண்டி உள்ளது என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என முறையிட்டனர்.