சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், திருவாவடுதுறை ஆதீனம் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களைச் சந்திப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தி.மு.க தலைவர்களும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.
மதிமுக சார்பாக வைகோ, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எனப் பலரும் முதலமைச்சரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும் போது, "இந்த நாள் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் நாள் எனவும், பாசிச அராஜகப் போக்கை எதிர்த்து நேரடியாகப் போராடக்கூடிய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமல்லாமல் தான் கொண்ட கொள்கையின் அடிப்படையிலும் என்றும் மாறாமல் நிற்பவர் மு.க.ஸ்டாலின் எனப் புகழாரம் சூட்டினார்.