தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிரடி தண்டனை! விளக்குகிறார் வழக்கறிஞர்.. - LAW FOR WOMEN

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் குற்றவியல் சட்டம் 2025 குறித்து வழக்கறிஞர் நடராஜன் அளித்த சிறப்பு நேர்காணலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 1:08 PM IST

சென்னை:சென்னை ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை காவல்துறையால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால், புதிய சட்டதிருத்தத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்யப்படுவார்கள் என வழக்கறிஞர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருத்தச் சட்டங்கள்:பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட திருத்தச் சட்டத்தின் கீழான தண்டனைகள் குறித்து வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் தமிழக அரசு குற்றவியல் சட்டம் 2025, பாரதிய நியாய சன்கித் 2023, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 2023-இன் படி சட்ட திருத்தம் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அந்த சட்டத் திருத்தங்கள் தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை சட்டம் 1998இல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது அந்த சட்டங்கள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துவிட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர் நடராஜன் (ETV Bharat Tamil Nadu)

பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு கடும் தண்டனை:முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் (2025) ஜனவரி 10ஆம் தேதி, பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் வகையிலான 2 சட்ட திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் ஒருவர் கைது செய்யப்பட்டால், அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமின்றி பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை அளித்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்கப்படாதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட தண்டனை காலம்:இதன்படி, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கில் தாக்கும் குற்றத்திற்கு, இனி 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை என்றும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஈசிஆர் கார் விவகாரம்: கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது!

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25ம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வழக்கு விசாரணையும், கைதும்:இந்நிலையில், சென்னை ஈசிஆர் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் இது குறித்து பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கினை தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது வரை இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details