சென்னை:நடப்பாண்டிற்கான (2024 -25) சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், நேற்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவையாவன பின்வருமாறு:-
1) திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.
2) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.
3) கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.
4) புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தைப் பிரித்து தனித்தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் அமைத்தல்.
5) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்காக, போதை மருந்துகள் 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென, திருநெல்வேலியில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்தல்.
6) கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைத்தல்.
7) மதுரையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைத்தல்.
8) அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955-இன் கீழ் நுகர்ப்பொருள், குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென, சென்னையில் ஒரு சிறப்பு பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.
9) 1881 - ஆம் ஆண்டின் மாற்றுரிமை ஆவணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென செங்கல்பட்டில் ஒரு விரைவு நீதிமன்றம் அமைத்தல்.
10) சென்னை உயர்நீதிமன்ற முதன்மை ஆயம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் பயன்பாட்டிற்காக மின்கலத்தால் (Battery) இயங்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் தலா இரண்டு வீதம், 4 வாகனங்கள் ரூ.27.72 இலட்சம் செலவினத்தில் வாங்குதல்.
11) பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரிகளில் முறையை 5 ஆண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகள் 2024 - 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் தொடங்குதல்.