சென்னை: புளியந்தோப்பைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பட்டினம்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அரக்கோணத்தைச் சேர்ந்த ரவுடி ஒன்றரை கண் ஜெயபால், திருநெல்வேலி மாவட்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் தான் நிதி உதவி செய்தார் என ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர்.
இந்நிலையில் தான், கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டாலும், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட பத்து பேர் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் தான் என போலீசார் தெரிவித்தனர்.