தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது, மங்கல தேவி கண்ணகி கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சித்திரை முழுநிலவுத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாட்டின் சார்பில் தேனி மாவட்ட நிர்வாகமும், கேரளாவின் சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினரும் செய்துள்ளனர்.
பக்தர்கள் கேரளாவின் வழியாக குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப்பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும் சென்று வருகின்றனர். அதேபோல், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் புளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.