சேலம்:சேலம் மாவட்டம், சின்னம் பாளையம் சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர், ரங்கநாதன். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த சிப்ஹதுல்லா என்பவரிடமிருந்து 900 சதுர அடி காலி வீட்டு மனையை விலைக்கு வாங்கி, அதில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி உள்ளார்.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் என்பதால், தேர்தல் பணிக்காக அந்த இடத்தை சேலம் மாநகராட்சி 19வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள தேன்மொழி (தற்போதைய) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். வாடகைக்கு எடுத்து தற்போது 18 மாதங்கள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்காமலிருந்து வருகிறார் எனவும், அந்த இடத்தை கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறார் எனவும், நிலத்தைக் கேட்டால் குடும்பத்தைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ரங்கநாதன், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அந்தப் புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (பிப்.2) வந்து நிலத்தை அபகரித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடும் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு வழங்கினர்.