திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.25) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாரதனையும், 5 மணி அளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது.
காலை 7.30 மணிக்குச் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீ பாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்குச் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீ பாரணையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
மேலும் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொது தரிசனத்தில் சுமார் 6 மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருநெல்வேலி சாலையில் தற்காலிக பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரத வீதி வரை சர்வீஸ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையிலான அறங்காவலர்கள் குழு தைப்பூச விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தைப்பூசத் திருவிழா.. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்!