பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் குழந்தையை கொடுத்து தப்பிச்சென்ற பெண் திருப்பூர்: வெள்ளியங்காடு பகுதியில் கேண்டீன் நடத்தி வருபவர் செல்லம்மாள். இவரது சொந்த ஊர் வத்தலகுண்டு. இந்த நிலையில் நேற்று காலை செல்லம்மாள் அவரது சொந்த ஊருக்குச் செல்ல திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்துக்காகக் காத்திருந்த சமயத்தில், சுமார் 19 வயதுள்ள பெண் ஒருவர் செல்லம்மாள் அருகில் வந்து அமர்ந்துள்ளார்.
அதனையடுத்து அந்த பெண் திடீரென தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி, அருகில் உள்ள பாத்ரூம் சென்று வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அப்பெண் கையில் இருந்த பச்சிளம் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறும் கூறி குழந்தையை செல்லம்மாளிடம் கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் பாத்ரூம் செல்வதாகக் கூறிச் சென்ற பெண் திரும்பி வரவே இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தும் காலை 8.30 மணிக்கு குழந்தையை பெற்ற செல்லம்மாள், அப்பெண் திரும்பி வருவார் என மணிக்கணக்கில் காத்திருந்துள்ளார்.
இதனிடையே சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய பேருந்துகளும் வந்து சென்று கொண்டிருப்பதால், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் அதே இடத்தில் காத்திருந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார். அதன்பின்னர், போலீசாரும் செல்லம்மாளை பேருந்து நிலையத்தில் உள்ள தெற்கு புற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. மேலும், யார் குழந்தையைக் கொடுத்துச் சென்றது என அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையைப் பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆம்புலன்ஸில் வந்த பெண் செவிலியர் மற்றும் செல்லம்மாள், பெண் காவலர் அனைவரும் குழந்தைக்கு முத்தமிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, செல்லம்மாள் கூறியதாவது, “சொந்த ஊருக்குச் செல்லலாம் என காலை 8.30 மணிக்கு பேருந்து நிலையத்தில் வந்து அமர்ந்திருந்தேன். அடுத்த 5 நிமிடத்தில், அருகில் குழந்தையுடன் ஒரு பெண் வந்து உட்காந்தார். இந்த குழந்தையை பிடியுங்கள் பாத்ரூம் சென்று வருகிறேன் எனக் கூறினார். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தானே உதவ வேண்டும் என வாங்கிக் கொண்டேன். பார்த்தால் போன பெண் திரும்பி வரவே இல்லை. ஆகையால் போலீசாரிடம் தகவலை தெரிவித்து, குழந்தையை ஒப்படைத்தேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நபர் வெட்டி கொலை..! 8 பேர் கைது!