கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக விழா மேடையில் பேசிய அவர், "அனைத்து பகுதி மக்களுக்குமே ரயில் சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தொடர்ந்து ரயில்வே மேம்பாட்டுக்காக பல பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மட்டுமே ரூ.8,000 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையம், அதே மாதிரி பாம்பன் பாலம் வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. திருச்சி ரயில் நிலையம், மதுரை ரயில் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், கோவை ரயில் நிலையம் இது எல்லாம் பெரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.
சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகமாக தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு மட்டும் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2014-ல் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு பிரதமர் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்திற்கு புதிதாக 9 ரயில் பாதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயிலானது, ஊட்டியில் இருந்து வருகின்ற தேயிலை, மேட்டுப்பாளையம் காய்கறிகள் போன்றவைகளை நாம் விரைவாக தூத்துக்குடிக்கு அனுப்ப முடியும். தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். மக்களின் வரவேற்பை பொறுத்து, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் தினமும் கூட இயக்கப்படும்" என்றார்.
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில்:மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் எண் -16765 இரவு 7.35 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ரயில் எண் - 16766 இரவு 10.50 மணிக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இயக்கப்படும்.
மேலும், இந்த ரயிலில் ஒரு 2 டயர் ஏசி பெட்டியும், இரண்டு 3 டயர் ஏசி பெட்டிகளும், 9 சிலிப்பர் பெட்டிகளும், நான்கு செகண்ட் கிளாஸ் பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் இயக்கப்படுகின்றன. கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை வழியாக ரயில் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயிலும், தினமும் 3 முறை போத்தனூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான சேவையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் போர்ட் வரை இயக்கப்பட உள்ளதற்கான சேவையும் மத்திய இணை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: இணைய சேவை முடக்கம்.. கைப்பட எழுதப்பட்ட போர்டிங் பாஸ்.. சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் அவதி! - Flights delayed at Chennai airport