கிருஷ்ணகிரி:அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வரத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களை இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்க தர்பூசணி, நுங்கு, இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரியில் கொளுத்தும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் அனைத்து விதங்களிலும் பயன்தரக் கூடியவையாக இருக்கிறது. பனை இலையை விசிறி தயாரிக்கவும் நுங்கு, பனை பழம், பனைக்கிழங்கு, பதநீர், கள்ளு, கருப்பட்டி என எல்லா பருவங்களிலும் வருமானம் ஈட்டுபவையாக பனை மரம் விளங்குகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், உஷ்ணத்தை தணிக்க கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. நீர் ஆகாரமான நுங்கு, இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்துச் செல்கின்றனர். ஒரு நுங்கு 10 ரூபாய்க்கும், 8 நுங்கு 50 ரூபாய் எனவும் விற்கப்பட்டு வருகிறது.