கே.பி.முனுசாமி கண்டனப் பேச்சு கிருஷ்ணகிரி:பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன், மருமகள் பட்டியலின பெண்ணுக்கு அளித்த சித்ரவதையைக் கண்டித்து, ஓசூர் மாநகராட்சி மின்வாரிய அலுவலகம் முன்பாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று உறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள்தான் மூலக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டம்.
பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், மருத்துவப் படிப்பு வேண்டும் என்கிற கனவோடு இருந்த பட்டியலின மாணவியை பணியில் ஈடுபடுத்தி, அவரை அடித்து, தீக்காயம் ஏற்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து அதிமுக தரப்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:காவேரிப்பாக்கம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..
திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனையும், மருமகளையும் கைது செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியும் கைது செய்யாத அரசு, போராட்டம் என அறிவித்த பிறகுதான் கைது செய்திருக்கிறார்கள். இது பெயரளவிலான கைதாக இருக்கக் கூடாது. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனியார் ஊடகவியலாளர் ஒருவர் தன்னை தாக்க வருவதாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்தால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஒசூர் பகுதியில் கடந்த 3 மாதங்களில் 20 கொலைகள் நடந்துள்ளன. சட்ட ஒழுங்கு சீர் குலைந்து போனதே இதற்கான காரணம்.
மேலும், தீய சக்திகள் தங்கள் கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ளும்போதுதான் அதிக அளவிளான கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய தண்டனை அளித்தால்தான் குற்றம் புரிபவர்களுக்கு அச்சம் ஏற்படும். ஆனால், தமிழகத்தில் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு இந்த அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" எனப் பேசினார்.
இதையும் படிங்க:ராமர் கோயில் கட்டியதால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!