சென்னை:மதுரவாயல், வி.ஜி.பி, அமுதா நகர் கூவம் கரையோரம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜன் என்பவர் எடுத்துச் செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக சென்னை மாநகராட்சியின் 144-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் என்பவர் அவரது ஆதரவாளர்களை வைத்து இந்த இடத்தில் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு முறை நேரிலும், பின் தொலைபேசியிலும் உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும், ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர் கோயம்பேடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க:பணியில் இல்லாதவர்களுக்கு சம்பளம்.. ரூ.7.81 கோடி மோசடி செய்த இருவர் கைது!
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கோயம்பேடு போலீசார் தற்போது திமுக கவுன்சிலர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.