கள்ளக்குறிச்சி:மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் திருநங்கைகளுக்குத் தாலி அறுக்கும் நிகழ்ச்சி, மணமுடித்தல், தேரோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருகை புரிவார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, 21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது. 22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.