தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கு: கைதானவர்களின் செல்ஃபோனை பறிமுதல் செய்யாமல்விட்டது ஏன்? தனிப்படை போலீசிடம் சிபிசிஐடி கேள்வி! - KODANAD CASE CBCID INQUIRY

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் செல்ஃபோன்களை விசாரணை குழுவினர் பறிமுதல் செய்யாதது ஏன் என்று காவல் உதவி ஆய்வாளரிடம் சிபிசிஐடி போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகம்
கோவை அவினாசி சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 9:48 PM IST

கோயம்புத்தூர்:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிவையில், அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கை சோலூர் மட்டம் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அப்போது தனிப்படை போலீசார் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, கோடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு, சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளை தனித்தனியாக விசாரித்தனர்.

அதில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையானது ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் என தொடர்ந்து சம்மன் அளித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை விசாரித்த சேலம் தனிப்படையில் இருந்த வேலுசாமி, விஜயகுமார், மகேஸ்வரன் ஆகிய 3 போலீசாருக்கு கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன் பேரில் இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் என்பவர் மட்டும் ஆஜராகினார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கனகராஜ் , சயன் ஆகியோரது செல்ஃபோன்களை விசாரணை குழுவினர் பறிமுதல் செய்யாதது ஏன் என்பது குறித்து மகேஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முதலில் விசாரித்த போலீசார் மற்றும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆகியோரும் இருவரின் செல்ஃபோன்கள் குறித்து முழுமையாக விசாரிக்காமல் விட்டது ஏன் என்பது குறித்தும் முதலில் இந்த விசாரணை குழுவில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு விசாரணையின் துவக்கத்திலேயே இந்த இருவரின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்திருந்தால் வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கும் எனவும், விசாரணையின்போது கோட்டைவிட்டது எப்படி என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட் அருகே வசித்து வரும் அதிமுகவை சார்ந்த சங்கர், சம்பவத்தின்போது உயிரிழந்த ஓம் பகதூரின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர் ஆகியோர் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details