சென்னை:தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக கடந்த 2020ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். பின்னர், ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், தமிழக அரசு கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபுவை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 62 வயது வரை பணிபுரியலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் நியமிக்கப்பட்டதில் இருந்து பணியில் இருக்கலாம் என்ற விதியை சுட்டிக்காட்டியும், சைலேந்திரபாபு குறைந்த நாட்கள் மட்டுமே இருக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.