திருச்சி:திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி கடிதம் எழுதியது திருச்சியில் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கே.என்.நேரு தரப்பே உத்தரவு போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
கே.என்.நேரு முதன்முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான காணக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான். அவரை நான்குமுறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் முணுமுணுக்கப்படுகிறது.
எம்எல்ஏவுக்கு அழைப்பு இல்லை:இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் , சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் .இந்த ஆய்வு நிகழ்ச்சிக்கு தொகுதியின் எம்எல்ஏ சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும் ,அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சவுந்தர பாண்டியனுக்கு கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர் நேரு அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏவை ஓரங்கட்டுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.