ஈரோடு:திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என ஈரோட்டில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், "2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையாக பணியாற்றி கூட்டணி வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. இது எங்களை தேர்தல் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு தேர்தலை விடக் கடுமையாக பாடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளியாகத் தமிழகத்தில் உள்ள இந்திய கூட்டணி கட்சிகள் வெற்றி அமையும்.
இந்தியாவை யார் ஆளக்கூடாது என்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் திட்டமிட்டுள்ளோம். இது தான் எங்கள் தேர்தல் பிரசார வியூகம். 10 ஆண்டுகளில் விஞ்ஞான பூர்வமாக ஊழலை பாஜக செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் உட்பட யாரும் கடந்த 10ஆண்டுகள் பாஜக ஆட்சி மீது எந்த விமர்சனமும் செய்யவில்லை. இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு அதிமுக- பாஜகவை ஆதரிக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது"என்றார்.