தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 1:42 PM IST

ETV Bharat / state

'தமிழக வெற்றி கழகம்' நல்லப் பெயர்..! பெயரையோ, நடிகரையோ கண்டு யாரும் வாக்களிப்பதில்லை - காதர் மொய்தீன்

KM Kader Mohideen: நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பெயரை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

KM Kader Mohideen
இந்திய முஸ்லிம் லீக் கட்சி காதர் மொய்தீன்

திருச்சி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் திருச்சியில் நேற்று (பிப்.3) நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், 'இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கட்சியின் தேசிய பொதுக்குழு டெல்லியில் கூட்டப்படும். டெல்லியில் தலைமை அலுவலகமும் திறக்கப்பட உள்ளது. தற்போது இந்திய மக்களிடம் பா.ஜ.க-விற்கான ஆதரவு குறைந்து தான் வருகிறது. மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்குமா? என்கிற சந்தேகம் அவர்களுக்கே வந்துள்ளது.

இந்தியா கூட்டணியின் (INDIA Alliance) பிரதான நோக்கம் பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சியினர் எம்.பியாகி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது தான். நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் ஆணையத்தில் 3000-க்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவாகி உள்ளது. தமிழ், தமிழகம் என்கிற பெயரில் மட்டுமே 21 கட்சிகளுக்கு மேல் பதிவாகி உள்ளது.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 'தமிழக வெற்றி கழகம்' (TVK - Tamilaga Vettri Kazhagam) என பெயர் வைத்துள்ளார். அந்த பெயர் நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். நடிகர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கிடையாது. அவர்களுக்கு தனி வரலாறு உண்டு. திடீரென வந்து ஒருவர் எதையும் மாற்ற முடியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பெரியார் போட்ட விதை இன்றளவும் இருந்து கொண்டு இருக்கிறது. தமிழ் என்பது வெறும் மொழி கிடையாது. அது தனி பண்பாடு, வரலாறு, கலசாரத்தை கொண்டது. திமுக தான் அந்த கொள்கை அனைத்தையும் பின்பற்றும் கட்சியாக இருக்கிறது. அதற்கு ஈடாக தற்போது வரை எந்த கட்சியும் இல்லை.

அரசியலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் எங்கள் கட்சி உருவாகப்படவில்லை. சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற நோக்கில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு எம்.பி ஒருவர் போனாலும் போதும் என்கிற நிலையில் நாங்கள் உள்ளோம். ஒரு இடம் கொடுத்தாலும் நிற்போம், அதற்கு மேற்பட்ட இடங்கள் கொடுத்தாலும் நிற்போம். நிச்சயமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படும்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதபுரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எங்கள் கட்சியினர் விரும்புகிறார்கள். அதை கூட்டணி தலைமை முடிவெடுக்கும். 'ஏணி' சின்னம் எங்கள் சின்னம். அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாஜக-அதிமுகவை பிரித்ததே அண்ணாமலை? தேர்தலில் அண்ணாமலையின் பங்கு 'பூஜ்யம்' - எஸ்.வி.சேகர் பகீர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details