தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருவண்ணராயர் கோயில் திருவிழா; காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் களியாட்டம் ஆடி மகிழ்ந்த பக்தர்கள்! - sathyamangalam Tiger reserve forest

Karuvannarayar Temple Festival: வனப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயிலுக்குள் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் காத்திருந்த பக்தர்கள், பாரம்பரிய உடை அணிந்து களியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் களியாட்டம் ஆடி மகிழ்ந்த பக்தர்கள்
காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் களியாட்டம் ஆடி மகிழ்ந்த பக்தர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 4:21 PM IST

காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் களியாட்டம் ஆடி மகிழ்ந்த பக்தர்கள்

ஈரோடு:ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தெங்குமராஹடா வனத்தின் நடுவே ஆதி கருவண்ணாராயர் பொம்மாதேவியார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, கோயில் வளாகத்திலேயே சமைத்து விருந்து பரிமாறுவது வழக்கம்.

அந்த வகையில், இக்கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர். மேலும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காட்டுக்குள் வந்து செல்வதால், வனத்தின் சூழல் மற்றும் வனவிலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயிலுக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முக்கிய சில நிபந்தனைகளை, அதாவது ஒழுங்குமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பிப்.23 முதல் பிப்.25 வரை தினந்தோறும் 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருவண்ணராயர் கோயிலில் பிப்.23ஆம் தேதி நடைபெற்ற பூச்சாட்டு விழாவில் கலந்து கொள்வதற்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பக்தர்களில் 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

முதல் நாளில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் சென்ற பக்தர்கள், கோயிலுக்குள் சென்று ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்த பக்தர்கள் அடுத்த நாள் கோயிலுக்குச் செல்வதற்காக காராச்சிக்கொரை சோதனைச் சாவடியில் இரவு விடிய விடியக் காத்திருந்தனர். காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் பக்தர்கள் ஒரே நிறத்தில் பாரம்பரிய உடை அணிந்து தலையில் உருமாலையும், காலில் சலங்கையும் கட்டி களியாட்டம் ஆடினர். நாட்டில் மக்கள் நலமுடன் வாழவும் விவசாய செழிக்கவும், சுவாமி அருள்பாலிக்க வேண்டிப் பாடி ஆடினர். விடிய விடிய நடந்த பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் பணியில் இருந்த போலீசாரும் பார்த்து ரசித்தனர். கோயிலில் நடைபெற்று வந்த சுவாமி புகழ் ஆட்டமான தேவராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதால், பக்தர்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:தொழிற்சாலைக் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு.. விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details