கரூர்:கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டின் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜனவரி.16) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் அனுமதிக்கப்பட்ட 729 காளைகள் பங்கேற்று விளையாடியது. 380 காளையர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கினர். இந்த போட்டியில் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த கதிரவன் காளை முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. கரூர் ஆர்.டி. மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் காளைக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.
21 காளைகளை பிடித்த நாமக்கல், எருமைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக புதிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகள் முட்டியதில் 16 வீரர், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த சிலர் பாதுகாப்பு வேளிகளை கடந்து, மைதானத்திற்குள் செல்ல முயன்றவர்கள், காளைகள் வெளியேறும் பகுதியில் சுற்றித்திரிந்தவர்கள் என 63 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:"ராணிப்பேட்டை இளைஞர் விவகாரத்திற்கும், விசிகவுக்கும் தொடர்பில்லை"
மேலும் இதில் 12 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாவட்டம் குழுமணிசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் குழந்தைவேல் வயது 67 என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த ஆண்டில் இருந்து வெற்றிபெற்ற மாடுகளுக்கும், மாடு பிடிவீரருக்கும் கார் பரிசாக வழங்கப்படும்” என்றார்.