கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் கட்டளைமேட்டு வாய்க்கால் கரையோரம் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாதா ஆண் சடலம் கிடப்பதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெராஸ்கான் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் சென்று வாய்க்கால் அருகே நின்று விட்டது. இதனால் அந்த வாய்க்காலில், கொலை செய்யப்பட்ட நபரின் தலை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தீயணைப்புத்துறையினர் வாய்க்கால் உள்ளே இறங்கி தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபரின் கையில் இருந்த டாட்டூவை வைத்து, கொலை செய்யப்பட்ட நபர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ரவுடி காளிதாஸ் (37) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மீது கரூர் மற்றும் பிற மாவட்டங்களில், பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்தன்று கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டுமகாதானபுரம் நடுக்கரை வாய்க்கால் பகுதியில், நண்பர்கள் சிலருடன் காளிதாஸ் மது அருந்திக்கொண்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், குளித்தலை கோட்டம் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து ரவுடியின் தலை மற்றும் கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.